உலகப்பொதுமறை திருக்குறளை மக்கள் வாழிவியலாக்கினால் – குடும்பங்களில் நன்னெறி வளரும்;
ஊரில் அறம் பெருகும்; நாட்டில் சமத்துவம் மலரும்; உலகில் அமைதி நிலவும் என்பது சான்றோர் முடிவு.
“மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக் கொள், மக்களுக்காகத் தொண்டு செய்”என்னும் கருத்தியலுக்கேற்ப, கூட்டமைப்பின் இலக்கினை வென்றெடுக்க தமிழ்நாடு – இந்திய மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் ஊர்/நகர்கள்தோறும் கிளை அமைப்புகள் ஏற்படுத்தி, திருக்குறள் வழிநின்று தமிழ்ச் சமுதாய மீட்டுருவாக்கத் திட்டம் வகுத்துச் செயல்படுத்தி வருகிறோம்.
உலக வரலாற்றில் முதல்முறையாக தமிழர் மறை திருக்குறளைப் புலமை நூல் என்ற நிலை- யிலிருந்து மாற்றி புரட்சிநூலாக ஏற்று திருக்குறள் சமுதாயம் அமைத்திட முயல்கிறோம்!
சிந்துவெளி நாகரிக காலம் முதல் தொடர்ந்து ஏறத்தாழ ஐயாயிரம் (5000) ஆண்டுகளாகஆரியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், முகமதியர்கள், களப்பிரர்கள், பல்லவர்கள், விஜயநகரத்தார், மராட்டியர்கள், நாயக்கர்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட அன்னிய இனத்தவர்கள் தமிழ்இனத்தை அடிமைப்படுத்தித் தன்னாட்சி உரிமையைப் பறித்து விட்டனர்.
காலங்காலமாக நம் தமிழ்மொழி, பண்பாடு மீது அயல்இனத்தவர்களும் வெளிநாட்டவர்களும் நடத்தி வந்துள்ள அரசியல், பொருளியல், பண்பாட்டியல் தாக்குதல்கள் காரணமாக பிற மொழிகள், அயல் பண்பாடுகளுடன் கலந்து தமிழ்இன அடையாளத்தை இழந்து வருகிறோம்.
குறிப்பாக, இன்று நம் கோயில்களில் – நீதிமன்றங்களில் – அரசு அலுவலகங்களில் – பள்ளிக் கல்லூரிகளில்- வணிக நிறுவனங்களில் – ஏன் நம் வீடுகளிலும்கூட தமிழ்மொழியும் பண்பாடும் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகள் அவையின் ஓர் அங்கமான யுனெசுக்கோ நிறுவனம் நம் தமிழ்மொழி அழிந்து கொண்டிருக்கும் மொழிக்குடும்பத்தில் ஒன்றாகி வருகிறது என சுட்டிக்காட்டி எச்சரித்து உள்ளது.
அந்நிய ஆதிக்க சக்திகள் நம் தாய்த்தமிழ் இனத்தின் மீது மேற்கொண்ட அரசியல், பொருளியல், பண்பாட்டியல் படையெடுப்புகள்- தாக்குதல்கள் மற்றும் ஊடுருவல்கள் காரணமாக நம் தமிழ் இனம் காலம் காலமாக இழந்து வந்துள்ள தமிழ்மொழி உரிமை, தமிழ்ப் பண்பாட்டு உரிமை, தமிழ் மண் உரிமை, தமிழர் வளங்கள் உரிமை உள்ளிட்ட இனஉரிமைகளை திருக்குறள் வழிநின்று மீட்டெடுத்து மீட்டுருவாக்கம்
செய்து அடுத்த தலைமுறையினரிடம் சிந்தாமல் சிதறாமல் ஒப்படைக்கும் பணியில் உலகத் திருக்குறள்
கூட்டமைப்பு…
அதற்காக ஐக்கியநாடுகள்அவை வகுத்துத் தந்துள்ள நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான ௧௭ இலக்குகளை அளவுகோலாக கொண்டுள்ளோம்.
நமது தமிழ்இன மீட்டுருவாக்கப் பணியினைக் குடும்பங்களிலிருந்து தொடங்குகிறோம். ஆம், தமிழ் மரபுகள் அடிப்படையிலான விழாக்களையும், குடும்ப நிகழ்வுகளையும் திருக்குறள் நெறியில் நடத்திட திட்டங்கள் வகுத்து செயலாற்றி வருகிறோம்.
குறிப்பாக கால்கோள் விழா, புதுமனை புகு விழா, தொழில் தொடக்க விழா, நிறுவனத் திறப்பு விழா, பணிநிறைவு பாராட்டு விழா, மங்கைப் பருவ விழா (பூப்பு நீராட்டு),
திருமண உறுதி ஏற்பு நாள், திருமண விழா, வளைகாப்பு விழா, பெயர் சூட்டு விழா, பிறந்த நாள் விழா, காதணி விழா, நூல் ஏந்தும் நாள் (பள்ளிச் சேர்க்கை நாள்),
ஆண்டு விழா, வெள்ளி விழா (25), பொன் விழா(50), மணி விழா(60), பவள விழா (75), முத்து விழா(80), நூற்றாண்டு விழா,
இயற்கை எய்தல் நாள், நினைவேந்தல் விழா (படத்திறப்பு விழா), நீத்தார் நினைவு நாள் விழா
உள்ளிட்ட நிகழ்வுகளைத் திருக்குறள் வழியில் தமிழ் மரபுப்படி நடத்துவதற்கானத் திட்டங்கள் வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
உலக அரங்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் திருக்குறள் தொண்டாற்றிவரும் சான்றோர்களை ஒன்றிணைக்க வேண்டும்… திருக்குறள்நெறியைப் பரப்பவேண்டும்…திருக்குறளை வாழ்வியலாக்க வேண்டும்…தமிழினம் காலங்காலமாக இழந்துவந்துள்ள இனஉரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் எனச் சிறியனவும் பெரியனவுமாய்… சிற்றூர்களிலும் பேரூர்களிலும்… திருக்குறள் நெறிப்பரப்பி வரும் பற்றாளர்களையும்… அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்… திருக்குறள் வழியிலான உயர்ந்த சமுதாயக் கட்டமைப்பைக் ஏற்படுத்த வேண்டும்… இப்படி கடந்த பல நூறு ஆண்டுகளில் ஒரு நூறு திருக்குறள் சான்றோர்களாவது எண்ணியிருப்பர்; ஏங்கியிருப்பர்;
அவர்களில் ஒரு சில திருக்குறள் நெஞ்சினர் தம் கனவை நனவாக்க தம்மால் இயன்றவரை ஆக்கம் தரும் செயல்களை மேற்கொண்டு ஒருங்கிணைவிற்கான விழிப்புணர்வை உருவாக்கினர்; குறிப்பாக, உலகத்திருக்குறள் பேரவை மூலம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதன்முதலில் திருக்குறள் பற்றாளர்களை ஒருங்கிணைக்கும் பெரும் முயற்சியினை மேற்கொண்டார்.
அவரையடுத்து திருக்குறள் வேலா அரச மாணிக்கனார் அவர்கள் குறளாயம் என்னும் அமைப்பின் மூலம் திருக்குறள் பற்றாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். திருக்குறள் தே.கண்ணன் வள்ளுவம் என்னும் பெயரில் திருக்குறள் பற்றாளர்களையும் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பின்னாளில் திருக்குறள் முனுசாமி அவர்கள் வள்ளுவர் கோட்டத்தின் சிறப்பு இயக்குநராக இருந்து செயல்பட்டபோது திருவள்ளுவர் – திருக்குறள் அமைப்புகளையும் பற்றாளர்களையும் இணைக்கமுயன்றுள்ளார்.
இன்றும் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளை நடுவப்படுத்தி ஆயிரக்கணக்கான திருக்குறள்
அமைப்பினர் மற்றும் அமைப்புச்சாராத் திருக்குறள் தொண்டர்கள் உலகெங்கும் செயல்பட்டு
வருகின்றனர்.
அவ்வாறு செயல்பட்டுவரும் ஒவ்வொருவரும் தமக்குரிய எல்லைகளில் நின்று, பல்வேறு தொல்லைகளைத் தாங்கிச் செயற்பட்டு வருகின்றன என்பதைக் கனத்த இதயத்தோடு நினைத்துப் பார்க்கிறோம். இவ்வாறு திருக்குறள் தொண்டாற்றிவரும் திருவள்ளுவர்/திருக்குறள் அமைப்பினர் மற்றும் சான்றோர்களை வணங்குவோமாக! அவர்களுடைய செயற்கரிய திருக்குறள் பணியைப்
போற்றிப் பாராட்டுவோமாக!
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தோற்றம் ஒரு புதிய விடியல்! திருக்குறள் வளர்ச்சி வரலாற்றில் ஒரு புதிய பதிவேடு! திருக்குறள் சான்றோர்கள் கண்ட கனவுகளை நனவாக்குவதற்கான கால்கோள் விழா தான் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உலகத்
திருக்குறள் கூட்டமைப்பு தோற்றம் என்றால் மிகையாகாது.
ஐயன் திருவள்ளுவர் வகுத்துத் தந்துள்ள உலகப்பொதுமறை திருக்குறள்நெறி அடிப்படை யிலான ஓர் மக்கள் சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில்,
திருவள்ளுவர் ஆண்டு 2038 புரட்டாசி மாதம் 15 ஆம் நாள் (01-10.2017) அன்று திருவள்ளுவர் – திருக்குறள் பெயரில் செயல்படும் 22 அமைப்புகள் ஒன்று கூடி, உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தொடங்கப்பட்டது.
உலகத்திருக்குறள் கூட்டமைப்பு தமிழ்நாடு சங்கங்கள் சட்டப்படியும், விதிமுறைகள் படியும், இந்திய அறக்கட்டளைச் சட்டவிதிமுறைகள் படியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டமைப்பு பதிவு எண் 318/2018 ஆகும். அறக்கட்டளை பதிவு எண் 227/2018.
தமிழ்ப்பேராசான் திருவள்ளுவர் வகுத்துத் தந்துள்ள உலகப் பொதுமறையாம் திருக்குறள் வழிநின்று – சாதி வேறுபாடற்ற, மதசார்பு இல்லாத, மூடப்பழக்கங்கள் மற்றும் மதுப்போதைகளுக்கு இடம்கொடுக்காத, பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்னும்படியான, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொருளாதார சமன்மையுடைய, இயற்கையோடு இயைந்த, அறிவியல் அறிவு பெற்ற, பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட, சமஉரிமை மற்றும் நீதியுடன் கூடிய சமத்துவ சமவுடைமைத் திருக்குறள் சமுதாயம் அமைத்தல் உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் இலக்கு ஆகும்.
குறிப்பாக, திருவள்ளுவர் – திருக்குறள் சார்ந்த இலக்கிய அமைப்புகள் மாணவர் சங்கங்கள் இளைஞர் மன்றங்கள், மகளிர் அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள் பொறியாளர் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், நவீன தொழில் நுட்ப ஊடகங்கள், கலைக்குழுக்கள், கணினிக்கழகங்கள், ஆய்வு மையங்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்ற பல்வேறு துறைசார்ந்த அமைப்புகளை ஒருங்கிணைத்தல். திருக்குறள் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் உறவுப் பாலமாக செயலாற்றுதல், திருக்குறள்நெறிவழி வாழ வழிகாட்டுதல்.