கிளை அமைப்புகளில் பல்துறைத் திறன் மேம்பாட்டு அரங்கம்
உலகத்திருக்குறள் கூட்டமைப்பின்
கிளை அமைப்புகளில் பல்துறைத் திறன் மேம்பாட்டு அரங்கம்
உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் கிளை அமைப்புகள் அமைந்துள்ள பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள், மகளிர், ஆடவர் உள்ளிட்ட அனைவரின் தனித்திறமைகளை வெளிக்கொணரவும் மாவட்ட, மாநில, இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெறவும் அதன் மூலம் தொலைக்காட்சி உள்ளிட்ட நவீன ஊடகங்களில் வாய்ப்புப் பெறவும் வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒரு மணி நேரம் பல்துறை திறன் மேம்பாட்டு அரங்கம் நடத்த வேண்டும்.
பேச்சு, பாடல், கவிதை, சிறுகதை, பொது அறிவு, வாசிப்பு, ஒப்புவித்தல், நடனம், குறுநாடகம், மாறுவேடம், நகைச்சுவை, அறிவியல், மருத்துவம், ஓவியம் மற்றும் மக்கள் விரும்பும் கிராமிய கலைகள்- இவற்றில் எந்தத் துறையில் ஆர்வம் உள்ளவர்களானாலும் பல்துறை திறன் மேம்பாட்டு அரங்கில் கலந்துகொண்டு- தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம்: உலகறியச் செய்யலாம்;
வாரந்தோறும் அவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நான்காவது ஞாயிற்றுக்கிழமை நிகழ்வின் முடிவில் ஊக்கப் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை மாவட்ட, மாநில, இந்திய அளவிலும் பல்துறை திறன் மேம்பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு,ஊக்கப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிப்பதோடு-
ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று பரிசுகள் பெறுபவர்கள் தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கேற்க பரிந்துரைக்கப்படுவார்கள்.
கிளை அமைப்புகளில் திறன் மேம்பாட்டு அரங்கினைக் கிளை நிருவாகிகள் வழிநடத்த வேண்டும். குறிப்பாக, கிளைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும்.
கிளை அமைப்புகளுக்கு ஒன்றிய, நகர, மாநகர மண்டல நிருவாகிகள் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். ஒன்றிய, நகர, மாநகர மண்டல நிருவாகிகளுக்கு மாவட்ட நிருவாகிகள் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். துறை இயக்குனர்கள் தங்கள் மாவட்ட நிருவாகிகளுக்கு (ஒரு வருவாய்
மாவட்டம் மட்டுமே) தேவையான வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்.
துணைத் தலைவர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், தங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மூன்று (3) மாவட்டங்களில் துறை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட நிருவாகிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்.
மாதந்தோறும் மாவட்ட அளவில் திறன் மேம்பாட்டு அரங்கில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று பரிசுகள் பெறுபவர்களின் படைப்புளை திருக்குறள் அரசுத் திங்களிதழில் வெளியிட்டுச் சிறப்புச் செய்யப்படும்.
கிளை அமைப்புகளில் பல்துறை திறன் மேம்பாட்டு அரங்கினைச் சிறப்பாக வழிநடத்த கிளைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், கரண ஆசான்கள் மற்றும் திருக்குறள் வகுப்பு ஆசிரியர்களுக்கு முதற்கட்டப் பயிற்சி 2025 நவம்பர் (ம) டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும்.